வர்ம ஆராய்ச்சியில்எங்களுடைய வேலை என்னவென்றால் வர்மம் குறித்த ஓலைச்சுவடிகளை திரட்டுவது அவற்றை படி எடுப்பது, ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பீடு செய்வது ,மேலும் இன்றைய மருத்துவத்துடன் எந்த அளவிற்கு ஒருங்கிணைந்து செல்கிறது என்பதனை ஆய்வு செய்வது, பிறகு அவற்றை புத்தகங்களாக வெளியிடுவது ஆகும்.
இதுவரை நூற்றுக்கும் அதிகமான சுவடிகளை ஆய்வு செய்து இருக்கிறோம், வர்மம் குறித்து 45 லிருந்து 50 முக்கிய நூல்கள் உள்ளன, மிகவும் ரகசியமாக வைத்து பாதுகாக்கப்பட்ட நூல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.
உற்பத்தி நடைமுறை என்ற ஒரு நூலை நாங்கள் ஆய்வு செய்ததில் எங்களுக்கு பல தகவல்கள் கிடைத்தன அதன் மூலமாகத்தான் வர்ம மருத்துவத்தில் 12 நாடிகள் உள்ளன என்பதனை அறிந்தோம்
இப்படிப்பட்ட மூலநூலை கொண்டுவருவது மிகவும் சவாலான ஒரு காரியமாக இருந்தது பல ஆசான்கள் அவை வருவதை விரும்பவில்லை, இதனை மீட்டு எடுத்து புத்தகங்களை மீட்பதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் முஞ்சிறையை சேர்ந்த மோகன்ராஜ் அவருடைய பங்களிப்பு அளப்பரியது அவருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்.
வர்ம மருத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் வர்மத்தை பற்றிய தவறான ஒரு புரிதல் இன்று மக்களிடையே இருக்கிறது, பெரும்பாலும் அதை தவறாக புரிந்து கொண்டு மக்கள் பல்வேறு விதமாக பேசுகிறார்கள்
வர்மத்தின் பல்வேறு கோணங்களில் நாம் அதனை சரியாக புரிந்து கொண்டோம் என்றால், எப்படி , எந்த எந்த சூழ்நிலையில் வர்மம் சிறப்பாக வேலை செய்யும் எங்கு துணை மருத்துவமாக வேலை செய்யும் என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.
வர்ம மருத்துவத்தில் சில வரம்புகள் உள்ளது.
1.சில நோய்களுக்கு நன்கு உதவும் 2.சில நோய்களுக்கு துணையாக உதவும் 3.சில நோய்களுக்கு உள் மருந்து உதவியுடன் உதவும்
மனிதனின் உடலை மூன்றாக வர்மம் பிரிக்கிறது, இதில் பல விதமான ஆற்றல்கள் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்த ஆற்றல்களுக்குள் ஏதேனும் குளறுபடி, அல்லது போதுமான ஆற்றல் இல்லை என்றாலும், ஆற்றல் நின்று விட்டாலும் அங்கே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன.
1. பருஉடல் 2. காரண உடல் 3. நுண்ணுடல்
பருஉடல்: என்பது சூரிய மண்டலத்தை குறிக்கும். சூரிய மண்டலம் தொண்டையிலிருந்து தொப்புள் வரை உள்ள இடம். இதில் இதயம் உள்ளது. 72,000 நாடிகளாக பிரிந்து நமது உடலுக்குள் செல்கிறது.
காரண உடல்: இது மூளை மற்றும் நரம்புகளைக் கொண்டது. இதில் 72,000 நரம்புகள் மூளையிலிருந்து செல்கிறது. பருஉடலுக்கு ரத்தமும், காரண உடலுக்கு உணர்வுகளும் காரணமாக அமையும்.
நுண்ணுடல்: இது மூலாதாரம் என்னும் குண்டலினி சக்தியில் உள்ளது.
1.காயத்தினால் வந்ததா? 2.காயம் இல்லாமல் வந்ததா?
காயத்தினால் வந்த நோய் மறுபடி இரண்டாக பிரிக்கப்படும். வர்ம புள்ளிகள் பாதிக்கப்பட்டு வருதல், எளிய சிராய்ப்பு, வீக்கம் என்று பிரியும்.
எலும்புகளில், நரம்புகளில் வலி ஏற்படும் காயங்கள் மற்றும் நோய்களை சரி செய்ய வர்ம மருத்துவம் தான் சரியானது, இந்தியாவிலேயே வர்ம மருத்துவம் தான் இவற்றுக்கு சிறந்தது எனலாம். காயங்கள் மற்றும் காய சிகிச்சைகளைப் பற்றி வர்ம மருத்துவம் நிறைய பேசுகிறது. நிறைய இடங்களில் நாம் வர்ம புள்ளிகளை வைத்து குணப்படுத்தினாலும் உள் மருந்துகள் தேவைப்படுகின்றன அப்போது தான் முழுமையான தீர்வு கிடைக்கும்.
நம் உடலில் ஏற்படும் சில வலிகள் மருந்து உண்டும் சரியாகவில்லை எனில் நமது வாசிய ஓட்டத்தினை வர்மத்தினால் சரிசெய்தால் வலி குணமாவதை காணலாம்.
வர்ம மருத்துவம் என்பது ஒரு மருந்தில்லா மருத்துவம் என்று கூறப்படுகிறது அது தவறு, ஆயிரம் விதமான மருந்துகள் வர்மத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் அல்லாத புதிய மருந்துகள். முதலில் வர்மம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். வர்ம மருத்துவத்தில் மூலிகைகள் தாதுக்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து மருந்துகள் பெறப்படுகிறது. நம் உடலில் 1008 வர்ம புள்ளிகள் உள்ளது.மேலும் 186 அடங்கல் புள்ளிகள் அடங்கும். இத்தகைய புள்ளிகள் என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.
நமக்கு ஏதேனும் அடிபட்டு விட்டால் வாசி நமது உடலில் ஒரே இடத்தில் தங்கிவிடும். இது அடங்கல் புள்ளியாகும். இதில் மருத்துவம் மூலமாக வாசியத்தை கலைத்து மீண்டும் அதன் ஓட்டத்தை தூண்டுவது வர்மமாகும்.108 வர்ம புள்ளிகள் நம் உடலில் மிக முக்கியமானது. இந்த புள்ளிகளில் ஏதேனும் கேடு ஏற்பட்டால் அது நோயை விளைவிக்கும். இதுவே ‘பிணி’ எனப்படும். இதனை சரி செய்யவே ‘மருத்துவம்’ தேவைப்படுகிறது.
வர்மப் புள்ளிகள் என்பது நோய்கள் வருவதற்கும், நோய்களிலிருந்து காக்கவும், நிவாரணியாகவும் ,வலிகளில் இருந்து காத்துக் கொள்ளவும் மற்றும் பல நோய்களிலிருந்து காக்கும் உப மருந்தாகவும் செயல்படுகிறது.
பரு உடல் ஏதேனும் நோயிற்கு ஆளாகும்போது இதில் உள்ள சூட்சும சரீரம் பாதிக்கப்படுகிறது.
நாடி என்பது பருஉடல் நிலையையும் சூட்சும சரீரத்தின் நிலையையும் அறிய பயன்படுகிறது.
1. நம் உடலில் 12 நாடிகள் உள்ளது. இது வாசி எனப்படும். 108 வர்ம புள்ளிகளும் 255 வர்ம பாதைகளும் உள்ளது.
2. உடலின் ஆறு ஆதார சக்கரங்களுடன் தொடர்புடையது.
3. பரு உடல் நோய்களை சரி செய்ய பயன்படுகிறது வாத பித்த கபம் ஆகியவற்றையும் சரி செய்ய பயன்படுகிறது.
4. மண், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய ஐம்பூதங்களின் அடிப்படையில் வர்மப் புள்ளிகள் உள்ளது. இதில் ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் அதனையும் சரி செய்ய நாடி பயன்படுகிறது.
வர்ம மருத்துவம் பற்றி மேலும் விவரமாக அறிய கீழே உள்ள காணொளியை காணவும். - https://youtu.be/Em9-lsot0cg?si=C94GHx1cTrwhGJAu